

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஆர்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
இளைஞர் பலியானதன் மூலம் காஷ்மீரில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
“பெல்லட் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மார்பில் காயம் ஏற்பட்ட ஆமிர் பஷீர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது மருத்துவர்கள் ஆமிர் பஷீர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலியான இளைஞர் புல்வாமா மாவட்டத்தின் பொஹு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை:
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் வந்தடைந்தார், காஷ்மீர் பிரச்சினையில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக அவர் கூறினார்.
உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷியுடன் வந்துள்ள ராஜ்நாத், காஷ்மீர் நிலவரங்களை மதிப்பீடு செய்யவுள்ளார். புர்ஹான் வானி என்கவுன்ட்டருக்குப் பிறகு சுமார் 66 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 8,000 பேர் காயமடைந்துள்ளனர்.