Last Updated : 16 Jun, 2017 02:02 PM

 

Published : 16 Jun 2017 02:02 PM
Last Updated : 16 Jun 2017 02:02 PM

சோனியாவுடன் அமைச்சர் ராஜ்நாத், வெங்கய்ய நாயுடு சந்திப்பு: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டது. ஆனால், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் எந்த வேட்பாளர் பெயரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உட்பட எல்லா எதிர்க்கட்சியினரும் தங்கள் சார்பில் பொது வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைக்க தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேவேளையில் குடியரசுத் தலைவரை அனை வரும் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது.

அதன்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். (அமைச்சர் அருண் ஜேட்லி தற்போது கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.) இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. எனினும், இருதரப்பில் இருந்தும் யாருடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. இதனால் இந்த சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்க ஒருவர் அல்லது சிலருடைய பெயர்களுடன் பாஜக தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு பதில் எங்களிடம் அவர்கள் பெயர்களை கேட்டார்கள்’’ என்றார்.

இந்த சந்திப்பின் போது உடன் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும் போது, ‘‘பாஜக குழுவினர் யாருடைய பெயரையும் கூற வில்லை. அவர்கள் யாருடைய பெயரையாவது கூறி னால், அது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி முடிவெடுப் போம். அதுவரை ஒருமித்த கருத்து என்பதற்கு இடமில்லை’’ என்றார்.

சீதாராம் யெச்சூரியுடன் சந்திப்பு

மார்க்சிஸ்ட் பொதுச் செயலா ளர் சீதாராம் யெச்சூரியையும் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது.

இதுகுறித்து யெச்சூரி கூறும் போது, ‘‘குடியரசுத் தலைவர் வேட் பாளர் பெயரை பாஜக தலைவர்கள் கூறவில்லை. மதச்சார்பற்ற கொள்கையில் தீவிர பற்றுள்ள ஒருவர், குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்ற மார்க்சிஸ்ட் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை பரிந்துரைக்கலாம் என்று பாஜக.வின் கூட்டணி கட்சியான சிவசேனா ஏற்கெனவே கூறியுள்ளது. அவரை பாஜக ஏற்காவிட்டால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை பரிந்துரைப்போம் என்று தற்போது கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x