

ஹரியாணா மாநிலம் குர்கான் அருகே ஷிகோபூர் கிராமத்தில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு ராபர்ட் வதேரா விற்பனை செய்தார்.
இந்த நில பேரத்தில் முறைகேடு நடைபெற்றதாகத் தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் ஹெம்கா, அந்த பத்திரப் பதிவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரப் பதிவுத் துறை அதிகாரியாக இருந்த அசோக் ஹெம்கா, ஹரியாணா விதை மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நில விற்பனை தொடர்பான பதிவை ரத்து செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு ஹரியாணா அரசு 7 பக்க குற்றச்சாட்டு அறிக்கையை அசோக் ஹெம்காவுக்கு ஹரியாணா மாநில அரசு அனுப்பியுள்ளது.
ஹெம்கா வீட்டில் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினரிடம் அந்த அறிக்கையை அரசு அலுவலர்கள் அளித்துள்ளனர். 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹெம்காவை பிடிஐ செய்தியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தான் இப்போது டெல்லியில் இருப்பதாகவும், ஹரியாணா சென்றவுடன் தனது பதிலை மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப் போவதாகவும் கூறினார்.
ஹரியாணா அரசு அனுப்பியுள்ள குற்றச்சாட்டு அறிக்கையில், வதேரா மற்றும் டி.எல்எஃப் நிறுவனத்தின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஹெம்கா நடந்து கொண்டுள்ளதாகவும், நிர்வாகத் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின் கொள்கைகளை விமர்சித்தது, ஊடகங்களிடம் தன்னிச்சையாக பேட்டி அளித்தது, பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும் தனது பொறுப்பை புதிய அதிகாரியிடம் ஒப்படைக்காமல் இருந்தது
ஆகிய குற்றச்சாட்டுகளை ஹெம்கா மீது அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.
- பி.டி.ஐ.