Published : 07 Jan 2014 09:18 AM
Last Updated : 07 Jan 2014 09:18 AM

வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு: டெல்லியில் இன்று தொடக்கம்

மூன்று நாள் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு புது டெல்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

பிற நாடுகளில் வாழும் இந்தியர் களின் நினைவாக, வெளிநாடு வாழ் இந்தியர் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெ டுக்கப்பட்டது.

இதையொட்டி வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு கடந்த 2003-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு இந்திய நகரத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் போது, வெளிநாடுகளில் சிறப்பாக பணியாற்றி, தாய் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் இந்தியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாநாடு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இந்நிலையில் நிகழாண்டு மாநாடு புது டெல்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

விழாவை பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார்.

மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஒய்.பி.டி.எஸ். பழனிவேல் முதன்மை விருந்தி னராகப் பங்கேற்கிறார். மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிறைவுரையாற்றுகிறார். மேலும் 14 பேருக்கு ப்ரவசி பாரதிய சம்மன் விருதுகளை வழங்குகிறார்.

மாநாடு குறித்து வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி நிருபர் களிடம் கூறுகையில்,

“இளம் சாதனையாளர்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இந்த ஆண்டு மாநாட்டின் சிறப்பு அம்சமாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார வாய்ப்புகள், மாநிலங்களில் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமர்வு கள் நடைபெறுகின்றன.

மாநாட்டில் பங்கேற்க 50 நாடுகளில் இருந்து சுமார் 700 பிரதிநிதிகள் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். மாநாட்டில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x