அகமதாபாத் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு

அகமதாபாத் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு
Updated on
1 min read

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 2 விமானங்கள் மோதிக்கொள்ள இருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய வட்டாரத்தினர் கூறியதாவது:

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம், நேற்று முன்தினம் மாலை 142 பயணிகளுடன் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, பெங்களூரு விலிருந்து வந்த இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் தரையிறங்கியது.

ஓடுபாதையை விட்டு விலகிவிட்டதாக இண்டிகோ விமான பைலட் விமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ஏடிசி) தகவல் கொடுத்தார். இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் விமானத்தை இயக்குமாறு பைலட்டுக்கு ஏடிசியிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இண்டிகோ விமானத்தின் ஒரு பகுதி ஓடுபாதையில் இருந்ததை திடீரென அறிந்த ஏடிசி அதிகாரி, உடனடியாக விமானத்தை இயக்க வேண்டாம் என்று ஸ்பைஸ் ஜெட் பைலட்டுக்கு கட்டளையிட்டார். இதனால் பெரிய அளவில் நிகழ இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, இண்டிகோ விமானம் வெளியிட்ட அறிக்கை யில், “விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் சில முயல்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் விமானத்தின் பின்பகுதி மட்டும் ஓடுபாதையில் இருந்தது. இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படுவது நிறுத்தப் பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்கு நரகத்துக்கு (டிஜிசிஏ) அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டிஜிசிஏ விசாரணைக்கு உத்தர விட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in