

பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் குறை தீர்ப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்கும் பெண்களுக்கு, 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். விசாரணை முடிந்த பிறகு அந்த பெண்கள் மீண்டும் பணியில் சேரலாம்.
இந்த 90 நாட்கள் விடுப்பு சிறப்பு விடுப்பாக கருதப்படும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விடுப்புகளுடன் சேர்க்கப்படமாட் டாது என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.
பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த பெண்களை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மிரட்டியது, அதிகாரத்தை கொண்டு எச்சரித்தது போன்ற புகார்கள் கவனத்துக்கு வந்துள்ளன. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன தளவில் பெரும் பாதிப்பை ஏற் படுத்துகிறது. இதையடுத்து மத்திய அரசு இந்த புதிய சட்டத் திருத்தங் களை கொண்டு வந்துள்ளது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
உடலை தொடுவது, மிக நெருக்கத்தில் உரசுவது போல் வருவது, பாலியல் தேவை பற்றி வற்புறுத்துவது, பாலியல் வார்த்தைகளை பேசுவது, ஆபாச படங்களை பெண் ஊழியர்களிடம் காட்டுவது போன்றவை பாலியல் தொல்லைகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெண் ஊழியரின் உடல்நலம் பாதிக்கும் வகையிலோ அல்லது அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அலுவலகங்களில் நடந்து கொள் வதும் பாலியல் குற்றமாக கருதப் படுகிறது.