Published : 13 Jan 2014 12:00 AM
Last Updated : 13 Jan 2014 12:00 AM

வெறுப்பு, பிரிவினையைத் தூண்டுவது உண்மையான மதம் இல்லை!- பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி பேச்சு

உண்மையான மதம் வெறுப்பு, பிரிவினையைத் தூண்டாது; இந்தியர்கள் அனைவரும் மதவாதத்துக்கு எதிராகப் போரிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

உண்மையான மதம் என்பது வெறுப்பு, பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக பரஸ்பரம் மரியாதை, அனைத்து மத நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம், சகிப்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

அனைத்து மதங்களின் ஆன்மாவும் ஒன்றுதான். அதனால் மதம் குறித்த வாக்குவாதம் மடமையானது, ஒருவர் மெய்ஞான நிலையை எட்டினால் அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று ஆராயக்கூடாது என்று விவேகானந்தர் கூறினார். அவரின் அந்த கருத்து எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. விவேகானந்தரின் தத்துவங்கள் நம் நாட்டுக்கு இப்போதும் எப்போதும் பொருத்தமானவையாக உள்ளன.

1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய விவேகானந்தர், அழகிய இந்த பூமியை மதவாதம் நீண்டகாலமாக ஆட்கொண்டுள்ளது. அதனால் வன்முறை வெடித்து மனித ரத்தம் மண்ணில் சிந்தப்படுகிறது, மனித குல நாகரிகம் அழிக்கப்படுகிறது என்றார்.

வெறுமனே விவேகானந்தரின் வாழ்க்கை யைப் பாராட்டி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் அர்த்தம் இல்லை. அவரது கருத்துகள், வழிகாட்டுதல்களை ஏற்று நடக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

சோனியா காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

உலக நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நேர்மாறாக இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல கல்வியறிவு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வு செம்மைப்படுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் விருப்பத்தை நிறைவேற்று வதில் அனைவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

எதிர்கால இந்திய தலைமுறையினரின் இதயத்தில் விவேகானந்தரின் கருத்துகள் ஆழமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதவாதத்துக்கு எதிராக போரிட முடியும்.

பல்வேறு நாடுகள், பிராந்தியங்களில் மத வாதம் அமைதியை சீர்கெடுத்துக் கொண்டிருக் கிறது. இந்த நேரத்தில் விவேகானந்தரின் வழிகாட்டல்கள் அனைவருக்கும் தேவை என்றார் சோனியா காந்தி.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள நரேந்திர மோடி மதவாதத்தின் அடிப்படையில் செயல்படுகிறார் என்றும் பிரிவினையைத் தூண்டுகிறார் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவில் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை மறைமுகமாக தாக்கிப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x