Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

பகல் கனவு காணும் பாஜக தலைவர்கள்

ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக தலைவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

மத்திய பிரதேசம் கார்கோனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:

பாஜக தலைவர்கள் தங்களின் சுயலாபத்துக்காக சகோதரனுக்கு எதிராக சகோதரனை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆட்சியைப் பிடித்துவிடலாம் என அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது. இப்போது பாஜகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்தப் பேராசை போட்டி காரணமாக ஒருவரை ஒருவர் கீழே இழுத்து தள்ளுகின்றனர்.

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி அளிக்கிறது. ஆனால் அந்த நிதி சிலரின் பாக்கெட்டுக்குள் சென்று விடுகிறது.

காங்கிரஸ் வெற்று வாக்குறுதிகளை அளிப்பது இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். சொல்வதை செய்வோம். பாஜக வெற்று தம்பட்டம் அடிக்கிறது. அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் வயிற்றுப் பசி ஆறாது.

ஊழல் அமைச்சர்கள்

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய பிரதேசம் வெகுவாகப் பின்தங்கியுள்ளது. மாநில அமைச்சர்களில் 13 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மீது இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை.

மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் மத்திய பிரதேசத்தில் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறுவதற்குப் பதிலாக கான்டிராக்டர்கள் பலனடைந்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் வறுமை, பட்டினிக்கு எதிராக மத்திய அரசு மிகப் பெரிய போர் தொடுத்துள்ளது. இதுபோல் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நவம்பர் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்துக்கு மக்கள் வித்திட வேண்டும் என்றார் சோனியா காந்தி.

இதை தொடர்ந்து ரேவா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சோனியா, குற்றங்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலும் மத்திய பிரதேசம் முதலிடம் வகிக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x