

காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க ஒமர் அப்துல்லா தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை செய்தனர்.
புர்ஹான் வானி என்கவுன்ட்டருக்குப் பிறகு 45-வது நாளாக காஷ்மீரில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது குறித்து பிரதமர் மோடி “ஆழ்ந்த கவலையையும், வலியையும்” ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு பிரதமர் மோடியுடன் சந்தித்து தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 75 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பிற்குப் பிறகு வெளியான அதிகாரபூர்வ அறிக்கையில், உரையாடலின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்துவதாகவும், ஒமர் அப்துல்லா தலைமை குழுவினர் அளித்த ‘ஆக்கப்பூர்வமான ஆலோசனகளை’ வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர அமைதித் தீர்வு காணவும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீரில் அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை பிரதமர் உணர்ந்திருப்பதாகவும் கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் குழுவினரிடம் உறுதியளித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அறிக்கை வெளியான உடனேயே ஒமர் அப்துல்லா, “பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையை வரவேற்கிறோம். காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர, சுமுக தீர்வு காண உடனிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறோம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பிரதமர் மோடி, “சமீபத்திய நிகழ்வுகளினால் உயிரிழந்தோர் நம்மைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், பலியானவர்கள் இளைஞர்களாயினும் ராணுவத்தினர் ஆயினும், போலீஸ் ஆயினும் நம்மை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது” என்று கூறியதாக அப்துல்லா தெரிவித்தார்.
மேலும், வளர்ச்சி, முன்னேற்றம் என்பது மட்டுமே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகாது என்று ஒமர் தலைமை குழு வலியுறுத்தியதையும் பிரதமர் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் ஒமர் அப்துல்லா.
அதாவது, “வளர்ச்சி என்பது மட்டுமே தீர்ப்பாகாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், ஆனால் அவரது கூற்றுக்கான எந்த அர்த்தத்தையும் நான் திணிக்கவோ, பெறவோ விரும்பவில்லை. பிரதமர் எங்களின் கோரிக்கைகளை அமைதியாக ஏற்று, மனுவையும் பெற்றுக் கொண்டார்” என்றார்.
மேலும் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதை பொறுமையுடன் பிரதமர் அணுகியதையும், தங்களது அக்கறைகளை கவனத்துடன் பிரதமர் எடுத்துக் கொண்டதையும் குறிப்பிட்டு ஒமர் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.