

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ் (75). இவர் முதலில் நாடகத் துறையில் கால்பதித்து, பின்னர் திரைத் துறையில் நுழைந்தார். 151 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 53 திரைப்படங்களைத் தயாரித் துள்ளார்.
தாசரி நாராயண ராவ் கடந்த 2000-ம் ஆண்டில் மத்திய இணை அமைச்சராகவும் பணி யாற்றினார். இவர் இயக்கித்தில் உருவான 12 திரைப்படங்கள் 175 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்துள்ளன.
இவருக்கு 2 முறை தேசிய விருதும், 9 முறை ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதும், 4 முறை ஃபிலிம் பேர் விருதும் கிடைத்துள்ளது. 1996-ல் ஆந்திரா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தாசரி நாராயண ராவ் சமீப காலமாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள கிமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலக பிரமுகர்கள், தெலங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பரில் ரசிகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மதியம் அருகில் உள்ள பண்ணை வீட்டுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து மூத்த மகன் பிரபு அவரது உடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீ மூட்டினார்.
அப்போது தெலங்கானா அரசு சார்பில் 3 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரைத் துறையினரும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.