48 டிஎம்சி நீரைத் தேக்க காவிரியில் 3 அணைகள், 22 தடுப்பணைகள்: ரூ.10,000 கோடியில் கர்நாடக அரசு புதிய திட்டம்

48 டிஎம்சி நீரைத் தேக்க காவிரியில் 3 அணைகள், 22 தடுப்பணைகள்: ரூ.10,000 கோடியில் கர்நாடக அரசு புதிய திட்டம்
Updated on
2 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 3 புதிய அணைகள் மற்றும் 22 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் 48 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு, கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் நீர்மின் நிலைய‌ம் அமைக்கப்படும் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 புதிய அணைகள் கட்டி 48 டிஎம்சி நீரை தேக்க முடிவு செய்திருப்பதாக கர்நாடகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசு சார்பாக,கர்நாடக அரசின் இந்த திட்டத்தை நிறுத்தக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

3 அணைகள், 22 தடுப்பணைகள்

இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பெங்களூரு, மைசூரு, பழைய மைசூரு ஆகிய நகரங்களின் குடிநீர் மற்றும் மின்சார‌ தேவைக்காக 48 டிஎம்சி கொள்ளளவில் மேகேதாட்டுவில் 2 அணைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக‌ 2,500 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியை கையகப்படுத்தினால், வன உயிர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ளது.

புதிய திட்டம்

மேகேதாட்டுவில் புதிய அணைக் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட காவிரி மேம்பாட்டு கழக அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.அதன்படி மேகேதாட்டு திட்டம் வேறு வடிவில் நிறைவேற்றப்படும்.

48 டிஎம்சி கொள்ள‌ளவு கொண்ட அணையை ஒரே இடத்தில் கட்ட முடியாததால், மேகேதாட்டுவில் 3 இடங்களில் 3 புதிய அணைகள் கட்டப்படும். இதில் 10 முதல் 20 டிஎம்சி அளவு நீரை தேக்க முடியும். அதனைத் தொடர்ந்து 22 இடங்களில் 5 டிஎம்சி வரையிலான கொள்ளளவு கொண்ட தடுப்பணைகள் கட்டப்படும். இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும். இதன்படி சிம்ஷா ஆறு, திப்பகொண்டனஹள்ளி, மஞ்சனபளே, கன்வா உள்ளிட்ட இடங்களில் அணைகள் கட்டப்படும்.

மார்ச்சில் தொடக்கம்

தற்போது திட்டமிட்டப்பட்டுள்ள இடங்களில் புதிய‌ அணைகள் கட்டுவதன் மூலம் வனமும் வன உயிர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படாது. எனவே, மத்திய, மாநில வனத்துறை இந்த திட்டத்தை எதிர்க்க வாய்ப்பில்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திட்டம் தொடங்கும்.

இந்த புதிய திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு வரும் டிசம்பர் 31 இறுதித் தேதி யாகும். இதுவரை அமெ ரிக்கா, ரஷ்யா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கோரியுள்ளன. காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டு கழக அதிகாரிகளும் நீர்வள‌த்துறை அதிகாரிகளும் திட்ட வரைவுப் பணிகள் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.

சம்மன் வரவில்லை

மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு சம்மன் வரவில்லை.

இந்த திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது இல்லை. ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் வழங்குகிறது. எனவே மேகேதாட்டு திட்டத்தை தமிழகம் எதிர்ப்பது அர்த்தமற்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in