

சவுதி அரேபியாவிலிருந்து ஸ்கைப் மூலம் பத்திரிக்கையாளர்களை தொடர்ப்பு கொண்ட ஜாகீர் நாயக் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
சர்ச்சைகுள்ளான முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக் நேற்று (வெள்ளிகிழமை) சவுதி அரேபியாவின் மஸாகான் மண்டபத்தில் ஸ்கைப் மூலம் பத்திரிக்கையாளர்களை தொடர்ப்பு கொண்டு தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கமளித்தார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1-ம் தேதி விடுதியொன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட தீவிரவாதிகள், மும்பையைச் சேர்ந்த பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுகளில் ஈர்க்கப்பட்டு தீவிரவாத பாதையைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்தது. தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டன. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கும் நேற்று சவுதி அரேபியாவின் மஸாகான் மண்டபத்திலிருந்து மும்பையிலுள்ள செய்தியாளர்களை சந்தித்தார் ஜாகீர் நாயக்.
இந்தியாவிலும் ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய டிவிடிக்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்குவதில் எவ்வித சமரசமும் செய்யப்படாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஜாகீர் நாயக் கூறும்போது "எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. அவை அரைகுறையாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில கருத்துகள் புனையப்பட்டுள்ளன. நான் அமைதியின் தூதுவன். மனித உயிர்களை கொல்வது என்பது இஸ்லாத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலும் ஏற்று கொள்ள இயலாத ஒன்று”. என்றார்.
உண்மைக் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்தவும்:
மேலும் அவர் கூறும்போது, "எனது வாழ்நாளில் இதுவரை காவல் துறை அதிகாரிகளோ, இந்திய அரசாங்க பிரதிநிதிகளோ விசாரணைக்காக என்னை அணுகியதில்லை. ஆனாலும், சில பேச்சாளர்கள் இஸ்லாம் பற்றி தவறான கருத்துகளை பரப்பி அப்பாவிகளை தவறாக வழிநடத்துகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் பேச்சுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சக்திகளை கண்டறியுங்கள். என் மீது களங்கம் விளைவிக்கும் முயற்சிகளை நிறுத்துவிட்டு உண்மைக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள்" என்றார்.
தான் எதாவது தவறான கருத்தை பதிய செய்திருக்கும் ஆதாரம் இருந்தால் அதன் உண்மை தன்மையை நிருபிக்குமாறு ஊடங்களை கேட்டுக் கொண்டார்.