

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராண்டி தனது மகனுக்கு மைனர் பெண்ணை திருமணம் செய்து வைத்த விவகாரத்தால் அக்கட்சிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில், பழங்குடியின வகுப்பை சேர்ந்த தலா மராண்டியை மாநில தலைவராக பாஜக மேலிடம் கடந்த ஜூன் மாதம் நியமித்தது. இவர் கட்சியை வளர்க்கும் நட வடிக்கையை மேற்கொள்ளாமல் தனது மகன் முன்னாவுக்கு கடந்த வாரம் மைனர் பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதை மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தவிர்த்தார்.
மேலும் மாநில பாஜக தலைவர் களும் மராண்டியின் இந் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சரான சுதர்சன் பகத் கூறும்போது, ‘‘மைனர் பெண்ணை திருமணம் செய்து வைத்தது பிரச்சினைக்குரிய விவகாரம் தான். மராண்டியின் இந்த செய்கையால் கட்சியின் பெயருக்கு அவமதிப்பு ஏற்பட்டு விட்டது’’ என்றார்.
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘கட்சியின் மத்திய தலைமை, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மராண்டியின் செயலால் மூத்த தலைவர்கள் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்’’ என்றார்.
பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னாள் ஒருங்கிணைப் பாளரான சூர்யமணி சிங்கும் மாநில பாஜக தலைவர் பதவியில் மராண்டி இனியும் நீடிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகியவையும் இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, மராண்டியை யும், அவரது மகனையும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என குரல் எழுப்பியுள்ளன.
தவிர, வரும் 22-ம் தேதி கூடவுள்ள ஜார்க்கண்ட் சட்டப் பேரவை கூட்டத் தொடரிலும் இப் பிரச்சினையை வலுவாக எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால் ஜார்க் கண்டில் பாஜகவுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனது செய்கையை நியாயப்படுத்தி யுள்ள மராண்டி கிராமப்புறங்களில் பெண்ணின் திருமண வயதை சரிபார்க்கும் வழக்கம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் தான் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சிக்கின்றன என்றும் தெரி வித்துள்ளார்.