Last Updated : 09 Sep, 2016 09:05 PM

 

Published : 09 Sep 2016 09:05 PM
Last Updated : 09 Sep 2016 09:05 PM

காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பு: இந்தியாவில் 14 லட்சம் பேர் உயிரிழப்பு

காற்று மாசு காரணமாக, ஆண்டுதோறும் 55 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதில், 60 சதவீதம் உயிரிழப்பு இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்வதாக, உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளவில் உயிரிழப்புக்கான காரணங்களில், 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில், 85 சதவீதம் பேர், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள தரத்துக்கு குறைவான, சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர்.

சீனா மற்றும் இந்தியாவில், அங்குள்ள மக்கள்தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவில் பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர்.

இந்தியாவில் 2013-ம் ஆண்டில் மட்டும், காற்று மாசு காரணமாக, 14 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதில், 9.2 லட்சம் பேர் வீட்டுச் சூழலில் மாசுபட்ட காற்றையும், 5.9 லட்சம் பேர் சுற்றுப்புற மாசு காரணமாகவும் இறந்தனர்.

இதுவே, சீனாவில் 8.2 லட்சம் பேர் மோசமான வீட்டுச் சூழல் காரணமாகவும், 9.1 லட்சம் பேர் சுற்றுப்புற மாசு காரணமாகவும் இறந்தனர். வீட்டுச் சூழலில் காற்று மாசு என்பது, அடுப்புக்காக விறகு, மரக்கரி, நிலக்கரி உள்ளிட்டவற்றை எரிப்பதால் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x