போகிமான் கோ விளையாட்டு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு

போகிமான் கோ விளையாட்டு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு
Updated on
1 min read

'போகிமான் கோ' விளையாட்டு இந்து மற்றும் சமண சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குஜராத் நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் பஞ்சோலி தலைமையிலான அமர்வு, மாநில, மத்திய அரசுகளுக்கும் விளையாட்டை உருவாக்கிய நின்டெண்டோ நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விளையாட்டைத் தடை செய்யக்கோரி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கில்,

''ஆக்மெண்டட் ரியாலிட்டியை (உண்மையான காட்சிகளில் டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட விஷயங்களை கலப்பது) கொண்ட 'போகிமான் கோ' விளையாட்டில் மதிப்பெண்கள் காண்பிக்கப்படும்போது முட்டையின் உருவம் தோன்றும். இவை பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் விளையாடப்படும்போது அது பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

முட்டை அசைவ உணவாகக் கருதப்படுவதால் வழிபாட்டுத் தலங்களில் அவை தோன்றுவது இழிவுக்குரிய செயலாக இருக்கிறது.

மெய்நிகர் உலகம் என்றாலும் கூட, கோயில்களில் மனிதர்களுக்கு முட்டை வழங்குவது தெய்வங்களை நிந்திப்பதும், கண்டனத்துக்குரியதும் ஆகும். இந்து மற்றும் சமணக்கோயில்களில் முட்டையைத் தேடுவது இழிவான செயல்.

இந்த விளையாட்டின் மூலம் நின்டெண்டோ நிறுவனம், இந்தியாவின் ஆன்மீகத் தனித்துவத்தையும், புனிதத்தன்மையையும், கலாச்சார அடையாளங்களையும் அழிக்க எண்ணுகிறது.

மேலும் இந்த விளையாட்டு ஒரு கண்காணிப்புக் கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் 'போகிமான் கோ' விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

'போகிமான் கோ' பின்னணி

பாக்கெட் மான்ஸ்டர்ஸின் (Pocket Monsters) சுருக்கமே போகிமான் - பாக்கெட்டில் அடங்கும் குட்டிச்சாத்தான்கள் தான் போகிமான். 1996-ஆம் ஆண்டு நின்டெண்டோ என்ற ஜப்பானிய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ கேம் இது. போகிமான் உலகில், சுற்றி மறைந்திருக்கும் சின்னச் சின்ன போகிமான்களை தேடிக் கண்டுபிடித்து அதை நாம் வசப்படுத்த வேண்டும். வசப்படுத்தியதும் அதற்கு பயிற்சி தந்து அதன் சக்திகளை கூட்டி மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன் மூலம் இன்னும் சக்திவாய்ந்த போகிமான்களை பெற வேண்டும். இதுதான் போகிமான் விளையாட்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in