டெல்லியில் ரூ.27 கோடி மதிப்புள்ள இமாச்சல் முதல்வரின் பண்ணை வீடு முடக்கம்: அமலாக்கத் துறையினர் நடவடிக்கை

டெல்லியில் ரூ.27 கோடி மதிப்புள்ள இமாச்சல் முதல்வரின் பண்ணை வீடு முடக்கம்: அமலாக்கத் துறையினர் நடவடிக்கை
Updated on
1 min read

இமாச்சல் பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங்கின், ரூ.27 கோடி மதிப்புள்ள பண்ணை வீட்டை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.

இமாச்சலில் காங்கிரஸ் சார்பில் வீர்பத்ர சிங் முதல்வராக பதவி வகிக்கிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து வீர்பத்ர சிங், அவரது மனைவி உட்பட சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. எனினும், அவர்களை கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ இமாச்சல் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

அந்தத் தடையை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்தது. அதன்பின், சில மணி நேரங்களில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வீர்பத்ர சிங், அவரது மனைவி உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதற்கிடையில், சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வீர்பத்ர சிங், அவரது மனைவி மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்நிலையில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி மெகரூலி பகுதியில் உள்ள வீர்பத்ர சிங்கின் பண்ணை வீட்டை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கி உத்தரவிட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பண்ணை வீட்டின் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.6.61 கோடி. எனினும் சந்தை மதிப்பு ரூ.27 கோடியாக உள்ளது” என்றனர்.

இதற்கிடையில், வீர்பத்ர சிங் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. அதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் வீர்பத்ர சிங் மீது வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. சட்டப்படி அதை சந்திப்போம்’’ என்றார்.

இமாச்சலில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வீர்பத்ர சிங் மீது ஊழல் புகார் எழுந்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in