

மகாராஷ்டிராவில் நடன பார்களில் மது பரிமாறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், புதிய விதிமுறைகளின்படி நடன பார்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்துவற்கும் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடன பார்களுக்கு அண்மையில் புதிய விதிமுறைகளை மாநில அரசு அமல்படுத்தியது. அதில், இரவு 11.30 மணி வரை மட்டுமே நடனமாட அனுமதி, மது பரிமாறக் கூடாது, நடன பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மகாராஷ்டிர அரசு தரப்பில், “மது பரிமாறுவதைத் தடுக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு. நடனம் நடக்கும் பகுதியில் குற்றங்களைத் தடுக்க கேமரா பொருத்தும்படி அறிவுறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
நடன பார்கள் உரிமையாளர்கள் தரப்பில், “கண்காணிப்பு கேமரா பொருத்தினால் வாடிக்கையாளர்கள் வரத் தயங்குவர். தனி மனிதர்களுக்கு அந்தரங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” எனத் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் “நடன பார்களுக்கும், மது பார்களுக்கும் உரிமம் பெற்றுள்ள நிலையில் அங்கு மது பரிமாறக் கூடாது என தடை விதிக்க முடியாது. மாநில அரசு விரும்பினால் மாநிலம் முழுவதும் மதுவைத் தடை செய்யலாம். கண்காணிப்பு கேமராக்கள் பழைய விதிப்படி நடன பார்களின் வாசலில் இருக்கலாம். உள்ளே தேவையில்லை. காவல் துறையின் அதிகாரத்தை தார்மீக அடிப்படையிலும், சட்டப்படியும் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். காவல்துறைக்கு உதவும் விதத்தில், நடன பார்களில் மாற்று ஏற்பாடுகளை உரிமையாளர்கள் செய்யலாம் “ எனத் தெரிவித்தனர்.