

டெல்லி செங்கோட்டையில் தொல்லியல் ஆராய்ச்சிதுறை மேற்கொண்ட தூய்மை பணியின்போது வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
செங்கோட்டையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொல்லியல் ஆராய்ச்சித் துறை சார்பில் பணிகள் நடைபெற்றது. அப்போது ஒரு கிணற்றிலிருந்து பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை போலீஸார் திறந்தபோது அவற்றில் வெடிபொருட்கள் இருந்தன.
இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லி வடக்கு பகுதியின் துணை போலீஸ் ஆணையர் ஜடின் நர்வல் கூறும்போது, "செங்கோட்டையில் உள்ள பதிப்பாளர் கட்டிடத்துக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் உள்ளடங்கிய பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு சிறப்பு நிபுணர்களும், ராணுவ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் இந்த பெட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.