Last Updated : 03 Jun, 2015 08:36 PM

 

Published : 03 Jun 2015 08:36 PM
Last Updated : 03 Jun 2015 08:36 PM

மேகி சர்ச்சை: தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாணையத்திடம் மத்திய அரசு புகார் அளிப்பு

மேகி விவகாரத்தில் நெஸ்லே நிறுவனத்துக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்திடம் (NCDRC) மத்திய அரசு புகார் பதிவு செய்துள்ளது.

சுமார் 30 ஆண்டுகால நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பிரிவை முதன் முறையாக மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறும் போது, "இது ஒரு முக்கியமான விவகாரம், எனவே தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாணையம் இந்த விவகாரத்தை விசாரிக்கும்.

இந்த நிலையில் நுகர்வோர் தீர்ப்பாணையம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை நாங்கள் கூறவியலாது.

மும்பை உள்ளிட்ட சில நகரங்களில் 25% மக்கள் வீட்டில் உணவு எடுத்துக் கொள்வதில்லை. துரித உணவு வகைகள் மீதான நுகர்வு அதிகரித்திருப்பதையடுத்து ஆரோக்கியச் சிக்கல்களும் எழுகின்றன. மேகி பெரிதும் குழந்தைகளால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12-1-டியின் கீழ் முதன்முறையாக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன் கீழ் மத்திய, மாநில அரசுகள் தங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்” என்றார் பஸ்வான்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் இந்தப் பிரிவின் படி மாநில, மத்திய அரசுகள் தனியாகவோ, நுகர்வோர் நலன்களின் பிரதிநிதியாகவோ புகார் பதிவு செய்ய முடியும்.

ஏற்கெனவே மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்திடம் மத்திய அரசு இந்த விவகாரத்தை ஒப்படைத்தாலும், நுகர்வோர் நலன்கள் கருதி விரைவு நடவடிக்கை காரணமாக தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாணையத்திடம் புகார் பதிவு செய்திருப்பதாக ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

அதாவது, “இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் இது குறித்து அறிக்கை அளிக்க கால அவகாசம் தேவைப்படும். இது நுகர்வோர்கள் பிரச்சினையாக இருப்பதால், தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பாணையத்திடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளோம்” என்றார்.

இந்திய உணவுப்பாதுகாப்பு தரநிலை ஆணையச் சட்டத்தின் படி பாதிக்கப்பட்டோர் நோய்வாய்ப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதமும் குறந்தது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும், அல்லது உயிரிழப்பு நேரிட்டால், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

“உணவுப்பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை எப்படி அமையும் என்று எங்களுக்கு இப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆனால் முடிவுகள் ‘பாசிட்டிவ்’ ஆக இருந்தால் அது மிகப்பெரிய ஒரு விவகாரமே” என்றார் ராம்விலாஸ் பஸ்வான்.

முடிவுகள் நிறுவனத்துக்கு எதிராக வந்தால் மேகியை அனைத்து மாநிலங்களும் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிடுமா என்ற கேள்விக்கு, “மாநிலங்களை தடைச் செய்ய நாங்கள் கோர முடியாது, மாநிலங்கள் தடை விதித்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, இது மாநிலங்கள் தொடர்பான விவகாரம்” என்றார்.

மேகி விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு, “தனிநபர் பற்றிய விவகாரம் அல்ல. இது நியாயமற்ற வாணிப நடைமுறை விவகாரமாகும். அதாவது தரமற்ற பொருட்களை விளம்பரம் மூலம் பொய்யான முன்னுரிமை கோரல்களோடு விற்று நுகர்வோர்களை தவறான வழிமுறைக்கு இட்டுச் செல்லும் விவகாரமாகும் இது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x