

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தன்னைத் தானே கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஊழலுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை எனில் தாம் ராஜினாமா செய்யப்போவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மிரட்டல் விடுப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவியது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், "நான் என்னை நானே கவிழ்த்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. என் அணுகுமுறை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் என் பணிகளைச் செய்கிறேன். நாங்கள் இரவும் பகலுமாக கடுமையாக உழைக்கிறோம்.
நான் எங்களது அரசைப் பற்றி கவலைப்படவில்லை. என் அரசு நாளை கவிழும் என்றால், இன்றே கவிழ்ந்துவிடட்டுமே" என்றார்.
காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறீர்களா என்று கேட்டதற்கு, "இல்லவே இல்லை. நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்? ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், நாங்கள் முந்தைய அரசின் ஊழல் விவகாரங்களை கிளற மாட்டோம் என்று அவர்கள் நினைத்திருந்தால், அது அவர்களுடை தவறு" என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.
முன்னதாக, ஜன் லோக்பால் மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விரைவில் இந்த மசோதாவை நிறைவேற்றப் போவதாக கேஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசு கூறி வருகிறது.
முதல்வர் முதல் 4-ம் பிரிவு ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் இந்த சட்டத்துக்கு உட்படுத்தப்படுவர். இதன்படி ஊழல் செய்பவர்களுக்கு அதிக பட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.