

இந்தியாவை தாயகமாக கருதுபவர்களுக்கு பசுவே தாய் என கருத்து தெரிவித்திருக்கிறார் ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ்.
பசு பாதுகாப்பு, தலித்துகள் மீதான தாக்குதல் என்ற சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் இக்கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "இந்தியாவை தாயகமாக கருதுபவர்களுக்கு பசுவே தாய். பசுபாதுகாப்பில் சங் பரிவார் அமைப்புகளுக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால் அதேவேளையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.
நமது பிரதமர் இப்பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். கால்நடைகள் கடத்தலில் ஈடுபடுபவர்களே பசுப் பாதுகாப்பு என்ற போர்வையில் தாக்குதலில், படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பது எனது கருத்து. இந்தக் கோணத்தில் போலீஸ் விசாரணைகள் நடைபெற வேண்டும்.
பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் சில சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. அரசியல் கட்சிகள் எல்லாப் பிரச்சினைகளிலும் வாக்கு லாபம் தேடக்கூடாது. பசும்பால் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் பயன்படுகிறது.
பலாத்காரங்களாக இருக்கட்டும், பசுவதையாக இருக்கட்டும் இல்லை வேறு எந்த சமூக விரோதச் செயலாகவும் இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் காரணம் ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும் பழக்கம் குறைந்து வருவதே. எனவே நல்லொழுக்கம் கற்பித்தல் அவசியம். பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்காங்கே நடக்கும் வன்முறைகள் பிரதமரின் தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான சதி" என்றார்.