பாஜக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: சண்டீகரில் நடிகை கிரண்கேர் மீது முட்டை வீச்சு

பாஜக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: சண்டீகரில் நடிகை கிரண்கேர் மீது முட்டை வீச்சு
Updated on
1 min read

கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர் சிலருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அனுபம்கேரின் மனைவியும், நடிகையுமான கிரண் கேர் மீது அழுகிய முட்டைகள் வீசப்பட்டு, கறுப்பு கொடிகள் காட்டப்பட்டன.

கடந்த சனிக்கிழமை பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பலரது பெயர்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டது. அதில், ஒருவரான கிரண்கேர், சண்டீகரில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இங்கு, முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்மோஹன் தவாண், சண்டிகரின் பாஜக தலைவர் சஞ்சய் டண்டண் மற்றும் முன்னாள் எம்.பி.யான சத்யபால் ஜெயின் ஆகியோர் எதிர்பார்த்து ஏமாந்தனர்.

இந்நிலையில், பிரச்சாரத்தை தொடங்குவதற்காக கணவருடன் செவ்வாய்கிழமை வந்த கிரண் கேருக்கு எதிராக, பாஜகவினர் கோஷம் போட்டு எதிர்ப்பு காட்டினர். அழுகிய முட்டைகளை வீசி, கறுப்புக்கொடிகளையும் காட்டிய தால் பரபரப்பு கிளம்பியது. இதில், பெரும்பாலானவர்கள் தவாணின் ஆதரவாளர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எதிர்ப்புக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட அருண் ஜேட்லி தனது அமிருத்ஸர் தொகுதியில் செவ்வாய்கிழமை பிரச்சாரம் தொடங்கினார். இது, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, எம்பியிடம் இருந்து பறிக்கப்பட்ட தொகுதி. இவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சித்துவுக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறப்பட்டது. இதற்கு சித்து அமிருதசரஸ் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் எனக் கூறி விட்டார்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரின் தொகுதி அறிவிப்புக்கும் எதிர்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. லக்னொவுக்கு மாறுவதற்காக ராஜ்நாத் விட்ட காஜியாபாத்தில் முன்னாள் படைதளபதியான வி.கே.சிங்கை நிறுத்த பாஜக திட்டமிடுகிறது.

இதற்கிடையே, அங்கு செவ்வாய்க்கிழமை பாஜக அலுவலகம் சென்ற வி.கே.சிங்கை சூழ்ந்தபடி காஜியாபாத்தின் பாஜகவினர் எதிர்ப்பு கோஷ மிட்டனர். இதுகுறித்து விகே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த நாடுமுழுவதுமே எனக்கு ஒன்றுதான். பாஜக தலைமை என்னை எங்கு போட்டியிடக் கூறினாலும் நான் தயாராக இருக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வந்துள்ள ஜெகதாம் பிகாபாலை உ.பி.யின் மத்திய பகுதியின் தொகுதியில் வேட் பாளராக்க முயல்வதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவர் எம்பியாக இருக்கும் தும்ரியா கன்ச்சில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in