

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பியதால், தொடர்ச்சியாக புதன்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி முன்னிலையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் வாக்கெடுப்பு இல்லாத விவாதம் நடத்தத் தயார் என மத்திய அரசு கூறி வருகிறது. இதை ஏற்க மறுத்து எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றத்தின் நடவடிக் கைகள் முற்றிலும் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் மக்களவை நேற்று காலை வழக்கம்போல கூடியதும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள சிவசேனா, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் மீண்டும் இப்பிரச்சினையை எழுப்பின. இதனால் மக்களவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப் பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோது, விதி எண் 56-ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தின.
கறுப்புப் பணத்துக்கு யார் ஆதரவு?
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ‘‘எதிர்க்கட்சிகள் கறுப்புப் பணத்துக்கு ஆதரவாக இருப்பதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்னவென்றால் ஆளும் கட்சி தான் கறுப்புப் பணத்துக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் தான் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதற்கு தயக்கம் காட்டுவதுடன், அனுமதி வழங்கவும் மறுக்கிறது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார், ‘‘ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து எந்த நேரத்திலும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. ஆனால் அந்த விவாதம் குறுகிய கால நேரத் துக்குள் முடிவடைந்து விடக் கூடாது. குறைந்தபட்சம் 3 நாட் களாவது நடக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கினால், அதை ஏற்று செயல் படுத்துவோம். கறுப்புப் பணம், கள்ளநோட்டு மற்றும் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவு அளித்து வருகிறது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய, ‘‘மக்கள வையில் ஆளும்கட்சிக்கு அதிக பலம் இருக்கிறது. இதனால் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தி னால் அரசுக்கு என்ன இழப்பு வந்துவிடப் போகிறது’’ என்றார்.
அப்போதும் ஆளுங்கட்சி சார்பில் விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அமளி
மாநிலங்களவையிலும் நேற்று இந்த விவகாரம் வலுவாக எதிரொலித்தது. ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் மக்க ளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து பிரதமர் மோடியின் முன்னிலையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் முதலில் நண்பகல் வரையிலும், பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் இந்த விவகாரம் குறித்து பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், ‘‘தேச நலனுக் காகவே ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட தாக பிரதமர் மோடி தெரிவிக்கிறார். இது உண்மை என்றால் வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது உயிரிழந்த 75 பேருக்கு இது வரை ஏன் பிரதமர் நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை’’ என கேள்வி எழுப்பினார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசி வருகிறார். இது நாடாளு மன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்’’ என்றார். இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த தால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித் ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக் கப்பட்டது
எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற முடக்கத் துக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதன் மூலம் எதையும் சாதித்து விட முடியாது. கறுப்புப் பணத்துக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை தேவை என ஒவ்வொருவரும் உணர்ந்துள் ளனர். ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்றது, அது தொடர்பான நடைமுறைகளை அமல் படுத்தியது ஆகியவற்றுக்குத் தான் எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பான கவலைகளை காது கொடுத்து கேட்பதற்கு அரசு தயாராகவே இருக்கிறது என விவரித்தோம்’’ என்றார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகளை அழைத்து சமாதானப் பேச்சு நடத்தினார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கோரிக் கையை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவைக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, திமுக உட்பட எதிர்க்கட்சிகள் தர்ணா
நாடாளுமன்றத்துக்கு வெளியே காங் கிரஸ் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகளின் தர்ணா நடந்தது. இதில் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி சுதீப் பந்தோபாத்யாய, ஜக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோனி உட்பட எம்பிக்கள் பலர் பங்கேற்றனர்.