நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் கைது
Updated on
1 min read

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ், சாராதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பித்தாநகர் போலீசின் துப்பறியும் படையைச் சேர்ந்த அர்னாப் கோஷ், பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் படி, மோசடியில், குணால் கோஷிற்கும் பங்கு உண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த குணால் கோஷ், சாராதா குழுமத்தின் ஊடக செயல்பாடுகளுக்குத் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தார். முன்னதாக, கட்சியின் தலைமையிலுள்ள இரண்டு பேருக்கு, மோசடியில் பங்கு இருக்கலாம் எனப் பேசியதை அடுத்து, கட்சியின் பெயருக்கு பங்கம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, செப்டம்பர் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஏற்கனவே, சாரதா சிட்ஃபண்ட் ஊழல் தொடர்பாக, அதன் தலைவர் சுதிப்தா சென், சிபிஐக்கு எழுதிய கடிதத்தில், தன்னிடம் இருந்து பணம் பறித்ததாக, கோஷை குற்றம் சாட்டியிருந்தார். பல முறை போலீசாரால் கோஷ் விசாரிக்கப்பட்டிருக்கிறார். மாநிலத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே, இப்படிப்பட்ட விஷயங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என கோஷ் தெரிவித்திருந்தார்.

தற்போது நடந்துள்ள கைதைப் பற்றி பேசுகையில், கட்சியின் ஆணைப்படி போலீஸ் செயல்படுவதால், தனது கைதை வெள்ளிக் கிழமை அன்றே எதிர்பார்த்ததாகவும், கட்சியின் பெயரைக் காப்பாற்ற, தன்னை பலி கொடுக்கிறார்கள் என்றும் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in