

டெல்லி வந்துள்ள இந்தியாவிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் குழுவை சந்திக்க பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை தரக்குறைவாக நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க சிறப்பு குழுவை சந்திக்க மோடி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதே காரணத்திற்காக இந்திய தலைவர்கள் பலரும், அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் குழுவை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மக்களவை சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர மேனன் ஆகியோர் அமெரிக்கக் குழுவை சந்திக்க மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சினையின் பின்னணி:
தனது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சங்கீதாவுக்கு விசா பெற்ற போது போலியான ஆவணங்கள், தகவல்களை இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும் பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை தேவயானியை கைது செய்த நியூயார்க் போலீஸார், அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.