Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

சீமாந்திரா முதல்வர் சிரஞ்சீவி.. தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ்?- காங்கிரஸ் கட்சி அடுத்தகட்ட திட்டம்

ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்படுவது நிச்சயமாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் அடுத்த கட்ட திட்டத்துக்கு தயாராகி வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் உள்ள காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பாகவே தெலங்கானா, சீமாந்திராவுக்கு தனது கட்சியைச் சேர்ந்தவர்களை முதல்வராக நியமிக்க ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்பாக, தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்காக கே.சந்திரசேகர ராவ் தொடங்கிய தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை காங்கிரஸுடன் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

டிஆர்எஸ் தலைவர் சந்திர சேகர ராவுடன் ரகசிய உடன்பாடு எட்ட காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் வரும் 25 அல்லது 26ம் தேதி தெலங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத், வாரங்கல் அல்லது கரீம் நகர் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில், மிகப்பெரிய 'நன்றி பொதுக்கூட்டம்' நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த பொதுக் கூட்டத்துக்கு சோனியா காந்தியை அழைத்து, தெலங்கானா மாநிலம் வழங்கியது காங்கிரஸ் கட்சிதான் என்பதை ஆணித்தரமாக மக்களுக்கு தெரிவிக்க உள்ளனர்.

இந்த பொதுக் கூட்டத்தை தொடர்ந்து, டி.ஆர்.எஸ் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கவும் விரைவாக காய் நகர்த்தப்பட உள்ளது. பின்னர், தெலங்கானா மாநிலத்துக்கு சந்திரசேகர ராவ் முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதே நேரத்தில், சீமாந்திரா பகுதியில் சிரஞ்சீவி அல்லது தற்போதைய மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பி.சத்ய நாராயணாவை முதல்வர் ஆக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 2 மாதத்திற்குள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன், சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தலாமா? அல்லது மேலும் 6 மாதங்கள் கழித்து நடத்துவதா எனவும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. இதனிடையே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வாய்ப்பில்லை என துணை முதல்வர் ராஜ நரசிம்மா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின்னர் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். விரைவில் இவர் புதிய கட்சி தொடங்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்ததோடு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x