21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: சிவசேனா திடீர் புறக்கணிப்பு; பாஜக-வுடன் மோதல் முற்றுகிறது

21 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: சிவசேனா திடீர் புறக்கணிப்பு; பாஜக-வுடன் மோதல் முற்றுகிறது
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. நான்கு கேபினட் அமைச்சர்கள், 17 இணை அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றனர். அவர்கள் 21 பேருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

4 கேபினட் அமைச்சர்கள்

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், சிவசேனா முன்னாள் நிர்வாகி சுரேஷ் பிரபு, பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுவின் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜகத் பிரகாஷ் நட்டா, ஹரியாணாவைச் சேர்ந்த சவுத்ரி வீரேந்தர் சிங் ஆகிய 4 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, டாக்டர் மகேஷ் சர்மா ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இணை அமைச்சர்கள்

முக்தார் அப்பாஸ் நக்வி, ராம்கிருபாள் யாதவ், ஹரிபாய் பார்திபாய் சவுத்ரி, சன்வர் லால் ஜாட், மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குண்டாரியா, கிரிராஜ் சிங், ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், பேராசிரியர் ராம் சங்கர் கத்தாரியா, ஒய்.எஸ்.சவுத்ரி, ஜெயந்த் சின்ஹா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாபுல் சுப்ரியா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, விஜய் சாம்ப்லா ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

இணை அமைச்சர்களில் ராம் கிருபாள் யாதவ் தவிர மற்ற அனை வரும் முதல்முறையாக மக்க ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்களாகி உள்ளனர்.

கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒய்.எஸ்.சவுத்ரிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவியேற்ற அமைச்சர் களுக்கு இலாகாக்கள் உடனடியாக ஒதுக்கப்படவில்லை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதிய அமைச்சர்களில் பெரும்பாலானோர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

2017 ல் தேர்தல் நடைபெற விருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து நான்கு பேர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் பிஹாரில் இருந்து மூன்று பேரும், வரும் 25-ம் தேதி தேர்தல் நடை பெற இருக்கும் ஜார்க்கண்டில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.

அடுத்த சில ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவிருக்கும் பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர். 2017-ல் தேர்தல் நடைபெறவிருக்கும் இமாசலப் பிரதேசத்தை சேர்ந்த நட்டா கேபினட் அமைச்சராகி உள்ளார்.

குஜராத்தில் இருந்து முதன் முறையாக இருவர் இணை அமைச்சர்களாகி உள்ளனர். இவர்கள் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனக் கருதப்படுகிறது. ராஜஸ்தானில் அதிக எம்பிக்கள் இருந்தும் குறைந்த மத்திய அமைச்சர்களே உள்ளனர் என்ற புகாரை சரிகட்டும் வகையில் இந்தமுறை இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் மதியம் 1 மணிக்கு நடந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பாஜக முதல்வர் மனோகர் லால் கத்தார் (ஹரியாணா), ரமண் சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரம்) ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் விழாவில் பங்கேற்றார்.

பழைய அமைச்சரவை

கடந்த மே 26-ம் தேதி பிரதமராக பதவி ஏற்ற மோடி தனது அமைச்சரவையில் 45 பேரை உறுப்பினராக்கினார். அதில் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த 22 இணை அமைச்சர்களில் பத்து பேர் தனிப் பொறுப்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். 23 கேபினட் அமைச்சர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே விபத்தில் உயிரிழந்தார்.

பாஜக-சிவசேனா மோதல் முற்றுகிறது

சிவசேனா சார்பில் மத்திய அமைச்சரவைக்கு அனில் தேசாய் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிவசேனா கேட்ட அமைச்ச ரவையை அவருக்கு ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் அவர் அமைச் சராக பொறுப்பேற்கவில்லை. டெல்லியில் தங்கியிருந்த அனில் தேசாயை உடனடியாக மும்பை திரும்பும்படி சிவசேனா தலைமை உத்தரவிட்டது.

சிவசேனா மூத்த தலைவர் சுரேஷ் பிரபு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என்பதால் அவரது பெயரை சிவசேனா பரிந்துரைக்கவில்லை. ஆனால் அவர் கேபினட் அமைச்சராக நியமிக் கப்பட்டுள்ளார். அமைச்சரவை பதவியேற்புக்கு சில மணி நேரத் துக்கு முன்பு அவர் பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முதல் இருகட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in