

ஆளுநருடன் கருத்து வேறுபாடு இல்லை என்று புதுவை முதல்வர் கூறியுள்ளார்.
புதுவை சட்டப்பேரவை யிலுள்ள அவரது அலுவலகத்தில் சென்டாக் மூலம் தேர்வான மருத்துவ மாணவர்களுக்கான அரசு நிதியுதவித்தொகை ரூ. 4.72 கோடியை 7 மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வர் கூறியதாவது:
புதுவையில் சென்டாக் மூலம் தேர்வுபெற்று தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி தரப்படுகிறது. தற்போது 210 மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நிதியுதவித் தொகை ரூ.4.72 கோடி மருத்துவக் கல்லூரிகளிடம் தரப்பட்டது. அதேபோல் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்கள் 1,283 பேருக்கு நேரடியாக ரூ.6.92 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்நிதியாண்டில் இதுவரை ரூ.41.65 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 7,462 மருத்துவ, பொறியியல் மாணவர்கள் பயன்பெறுவார்கள். 2013-
14-ம் ஆண்டு சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு ரூ. 18 கோடி வரை நிதியுதவி தர நடவடிக்கை எடுக்கிறோம்.
மாநில அந்தஸ்து தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் அரசு சார்பில் விரைவில் கூட்டப்படும். உடனடியாக டில்லி சென்று குடியரசுத்தலைவர், பிரதமரை சந்திப்போம். புதுச்சேரி வளர்ச்சிக் காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஆளுநரிடம் கோப்புகள் தேங்கியுள்ளதா என கேட்கிறீர்கள். நிர்வாகத்தில் கோப்புகள் அனுப்புவோம். அங்கிருந்து கோப்புகள் வரும். இது இயல்பான விஷயம். காரைக்கால் மருத்துவக்கல்லூரி தொடர்பாக 2006-ல் நில ஆர்ஜிதம் செய்தோம். திட்டமதிப்பு தயாரித்து வருகிறோம் என்று முதல்வர் கூறினார்.
ஆளுநருடன் மோதலால் அவர் பங்கேற்ற விழாவை புறக்கணித்தீர்களா என கேட்டபோது, “அப்படி ஏதும் இல்லை. ஆளுநருடன் கருத்து வேறுபாடும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.