

மகாராஷ்டிராவில் உள்ள 17 அரசு மருத்துவமனைகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக 3000 மருத்துவர்கள் ஒரே நாளில் விடுப்பு எடுத்துள்ளனர்.
மருத்துவர்கள் மீதான, நோயாளியுடைய உறவினர்களின் தாக்குதல்களுக்கு எதிராக இந்த விடுப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிரா மருத்துவர் சங்கம், ''மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான உறுதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இன்றும் 3,000 மருத்துவர்கள் விடுமுறை எடுத்துள்ளனர்'' என்று கூறியுள்ளது.
''ஒரு வாரத்தில் மட்டும் மருத்துவர்கள் மீது குறைந்தபட்சம் 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் 2 தாக்குதல்கள் நடைபெற்றன'' என்று இந்திய இளைஞர் மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கூறியிருந்தார்.
இதையடுத்து நேற்று(திங்கட்கிழமை) மகாராஷ்டிரா மருத்துவர் சங்க அலுவலர்கள், மும்பை மாநகராட்சி மேயரைச் சந்தித்துப் பேசினர். அப்போது மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிராக சில முடிவுகள் எடுக்கப்பட்டன. நோயாளிகளுடன் இருக்கும் உறவினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ''நோயாளியுடன் இரண்டு உறவினர்கள் மட்டுமே சிறப்பு அனுமதி அட்டையுடன் அனுமதிக்கப்படுவர். அனுமதி அட்டை இல்லாமல் யாராவது இருந்தால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை, அதேவேளையில் விடுமுறையில் இருக்கும் 4,000 மருத்துவர்களும் பணிக்குத் திரும்பவில்லை எனில், மாநகராட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்'' என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் குந்தன் தெரிவித்தார்.
மும்பையில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மகாராஷ்டிர மாநில பாதுகாப்புப் படையில் இருந்து 500 துணை ஆயுதப் படையினர் வருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய சிகிச்சைகளை மூத்த மருத்துவர்கள் மேற்கொண்டாலும், இந்த போராட்டத்தால் ஏராளமான நோயாளிகள் முறையான மருத்துவ சிகிச்சையை இழந்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த சுமார் 400 அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.