ஓட்டலில் முன்னாள் எம்.எல்.ஏ. மர்ம மரணம்: ரூ.350 கோடி ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் தற்கொலை

ஓட்டலில் முன்னாள் எம்.எல்.ஏ. மர்ம மரணம்: ரூ.350 கோடி ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் தற்கொலை
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அனார் சிங் திவாகர், ஓட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரிடமிருந்து ரூ. 350 கோடியை 5 பேர் ஏமாற்றிவிட்டதாக எழுதப்பட்டிருந்த கடிதத்தையும், துப்பாக்கியையும் ஓட்டல் அறையிலிருந்து போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், எடாவில் உள்ள ஷிகார் ஒட்டல் அறையில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அனார் சிங் திவாகர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் அருகே துப்பாக்கியும், கடிதம் ஒன்றும் கிடந்தது.

அவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பிவைத்தனர். ஓட்டல் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி சுரேந்திர குமார் வர்மா கூறும்போது, “முதல் கட்ட விசாரணையில் அனார் சிங் திவாகர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது. அவர் இறந்த இடத்திலிருந்து துப்பாக்கி, கடிதத்தை கைப்பற்றியுள்ளோம்.

அந்த கடிதத்தில் டெல்லியைச் சேர்ந்த 5 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் திவாகரிடம் ரூ.350 கோடி ஏமாற்றிவிட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்தே தற்கொலை முடிவை திவாகர் எடுத்துள்ளார்” என்றார்.

ஆனால், அனார் சிங்கின் உறவினர்கள், இது ஒரு கொலை என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த திவாகர், கடந்த 2002-ம் ஆண்டு ஜாலேஸார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு ஹத்ராஸ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in