

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 2 பேரின் தூக்கு தண்டனையை மார்ச் 31 வரை நிறைவேற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால தடை உத்தரவை நேற்று பிறப்பித்தது.
தெற்கு டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி பிஸியோதெரபி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவி முதலில் டெல்லி மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். 13 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, அக்சய் தாகுர், வினய் சர்மா மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 17 வயது சிறுவன் மீதான வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
முகேஷ், பவன், அக்சய் தாகுர், வினய் சர்மா ஆகியோர் மீதான வழக்கை டெல்லி விரைவு நீதிமன்றம் விசாரித்து 4 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் ரேவா கேதர்பால், பிரதிபா ராணி ஆகியோர் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முகேஷ், பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
போலீஸ் துன்புறுத்தல் காரணமாகவே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் எம்.எல். சர்மா ஆஜாரானார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மார்ச் 31-ம் தேதி வரை இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி. சதாசிவம் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி பதிவாளர் அலுவலகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போதுதான் தலைமை நீதிபதியின் அறிவுரைப்படி உரிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.