

ஆம் ஆத்மி கட்சி பெற்ற நன்கொடை நிதி விவரங்களை தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, நன்கொடை என்ற பெயரில் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தபோது, "ஆம் ஆத்மி கட்சி பெற்ற நிதி உதவிகள், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் கேட்டு அக்கட்சியினருக்கு இரு கடிதங்கள் அனுப்பபட்டன. ஆனால், அதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை" என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மேகரா தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் தலைமையிலான அமர்வு, இதில் ஆம் ஆத்மி கட்சியையும் சேர்க்குமாறு மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மணீஷ் சிசோடியா, பிரஷாந்த் பூஷண் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.