Last Updated : 12 Oct, 2013 11:49 AM

 

Published : 12 Oct 2013 11:49 AM
Last Updated : 12 Oct 2013 11:49 AM

2ஜி: கூட்டுக் குழுவில் காங்கிரஸ் முறைகேடு - பாரதிய ஜனதா குற்றச்சாட்டு

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பற்றி நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவின் அறிக்கை, காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அக்கட்சி முறைகேடான செயலில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த தனது ஆட்சேபணை அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.

56 பக்கம் கொண்ட ஆட்சேபணைக் குறிப்புகளின் சுருக்கத்தை முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வெளியிட்டுப் பேசினார். அவர் வெளியிட்ட ஆட்சேபணைக் குறிப்புகளின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் வருமாறு:

2 ஜி அலைக்கற்றை ஊழல் நடைபெற்றது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியில். ஆனால், கூட்டுக் குழுவின் விசாரணை காலம் 1998 முதல் 2009-ம் ஆண்டு வரை என நிர்ணயிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக்குகிறது.

அதன் பின்னர் முதல் கூட்டம் 2011-ம் ஆண்டு மார்ச் 24-ல் நடைபெற்ற போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சர்களாக இருந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் குழுவில் இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதை மற்ற கட்சிகள் எதிர்த்ததால், இறுதியாக மக்களவைத் தலைவரிடம் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டது.

மோசமாக நடத்தப்பட்ட ராய்

சாட்சிகள் விசாரணை தொடங்கியபோது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் சாட்சியம் அளிக்க முன்வந்தார். அப்போது அவரை காங்கிரஸ் உறுப்பினர்களும், கூட்டுக் குழுத் தலைவரான சாக்கோவும் கேவலமாக நடத்தினர். அவரை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து சாட்சியம் அளிக்க வற்புறுத்தினர். மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபித்ததால், அவர் குழுவுடன் அமர்ந்து சாட்சியம் தந்தார். அவரை ஒரு மோசடிக்காரர் போல நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 நாள்கள் ராயிடம் தாறுமாறாக கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடித்தனர்.

பிரதமரை விசாரிக்காதது ஏன்?

பிரதமர் மன்மோகன் சிங், ஆ. ராசா, தயாநிதி மாறன், கபில் சிபல், ப. சிதம்பரம் ஆகியோரை அரசியல் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டுக் குழுத் தலைவர் ஏற்க மறுத்தார்.

பிரதமரோ வீராவேசமாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயார் என்று அறிவித்தார்.

கூட்டுக் குழுவின் கடைசிக் கூட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது. அதன்பின்னர் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், ஏப்ரல் 18-ம் தேதி கூட்டுக் குழு அறிக்கையினஅ நகல் வெளியிடப்பட்டது. அதன் நகல் ஊடகங்களுக்கும் சென்றது. இந்த நகல் அறிக்கையைத் தயாரிப்பதில் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் செய்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சிவாவின் பதவிக்காலம்

தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவாவின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்து, ஆளும் கூட்டணிக்கு குழுவில் பெரும்பான்மை கிடைத்த பிறகு செப்டம்பர் 27-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டம் போலித்தனமானது. 334 பக்க அறிக்கையை விவாதிக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், திடீரென வரைவு அறிக்கையை கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ வாக்கெடுப்புக்கு விட்டார். அது ஏற்கப்பட்டதாகவும் அறிவித்தார். இந்த அறிக்கை பொய்கள், அரைகுறை உண்மைகள் மற்றும் முரண்பாடுகளின் மூட்டையாக உள்ளது.

எனவே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையை பா.ஜ.க. முற்றிலுமாக நிராகரித்து தனியாக ஆட்சேபணை அறிக்கையை அளித்தது.

அந்த அறிக்கையின் சுருக்கமான குறிப்புகளே இப்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x