

நாட்டை பலவீனப்படுத்தும் வகையில் பாஜகவின் செயல்பாடு அமைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
அசாம் மாநிலம், லக்கிம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: “நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் பாஜகவினர், வானத்தை வில்லாக வளைப்போம் என்ற ரீதியில் பேசி வருகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள்? பேசுவதற்கும், செயலில் ஈடுபடுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
2009-ம் ஆண்டு தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிவிட்டது. அதே போன்று, இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றையும் நிறைவேற்றுவோம்.
நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்ப தில்லை. நாட்டை பிளவுபடுத்தும் சக்தியாக பாஜக இருக்கிறது. தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. நாட்டை பலவீனப்படுத்தும் வகையில் பாஜக செயல்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அசாம் மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக முதல்வர் தருண் கோகோய் அயராது பாடுபட்டு வருகிறார். நதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது” என்றார் சோனியா.