

டெல்லி சட்டமன்றத்தை கலைக்காதது குறித்து ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆட்சி அமைப்பதில் அவர்கள் நிலையை விளக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
ஜன்லோக்பால் மசோதா அறிமுகப்படுத்த முடியாததால் தனது முதல் அமைச்சர் பதவியை 49 நாள் ஆட்சிக்கு பின், கடந்த 15 ஆம் தேதி ராஜினாமா செய்தார் அர்விந்த் கேஜ்ரிவால்.
அப்போது, சட்டமன்றத்தைக் கலைத்து மறு தேர்தலுக்கு உத்தரவிடுமாறும் அதன் துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங்கிடம் பரிந்துரைத்தார். இதை ஏற்காத மத்திய அரசு டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்து அதை அமல்படுத்தி விட்டது.
இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ் அளித்த மனுவை கடந்த மாதம் 24 -ம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் ஆம் ஆத்மி சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி.எஸ்.நரிமன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், ஆம் ஆத்மிக்கு பிறகு வேறு எந்தக் கட்சியும் நாட்டின் தலைநக ரான டெல்லியில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சட்டமன்றத்தைக் கலைத்து மறுதேர்தலுக்கு உத்தரவிடாதது டெல்லி மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாகும் எனத் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் அமர்வு, அரசியலில் நடந்திருக்கும் பல தலைகீழ் நிகழ்வுகளை சுட்டிக் காட்டியது. டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் எதிராக போட்டியிட்டு வென்ற ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் காங்கிரஸின் எதிர்க்கட்சியாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் மாற்று அரசின் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் உள்ளதா என பதில் அளிக்கும்படி கேட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எந்த காரணத்துக்காக டெல்லி சட்டமன்றம் முடக்கி வைக்கப் பட்டிருக்கிறது என்ற மத்திய அரசின் பரிந்துரை நகலை மனு தாரருக்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 31 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.