Last Updated : 26 Jan, 2017 09:37 AM

 

Published : 26 Jan 2017 09:37 AM
Last Updated : 26 Jan 2017 09:37 AM

வினய்கட்டியார் கருத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை: வெங்கய்ய நாயுடு

பிரியங்கா வதோராவை விட அழகானவர்கள் தம் கட்சியில் இருப்பதாக வினய்கட்டியார் கூறியதில் தம் கட்சிக்கு உடன்பாடு இல்லை என பாரதிய ஜனதா விளக்கம் அளித்துள்ளது. இதை அக்கட்சியின் சார்பில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சரான எம்.வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

இது குறித்து வெங்கய்யநாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவதூறான கருத்தை எவர் மீதும் யார் கூறினாலும் அது தவறு ஆகும். இதில் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இதுபோல், தவறாக வினய்கட்டியார்ஜி கூறியதாக மீடியாவில் வருவதை நானும் பார்த்தேன். மூத்த அரசியல் தலைவரான சரத்யாதவ்ஜியும் ஏதோ தவறாகக் கூறியுள்ளார். இதை நாம் ஏற்க முடியாது. இதை கட்சியோ, அரசோ ஆதரவு தெரிவிக்கவில்லை. இவ்விரு மூத்த தலைவர்களும் தம் தவறை உணர்ந்து தாம் கூறியக் கருத்துக்களை வாபஸ் பெறுவார்கள் என நம்புகிறேன். பெண்களை பற்றி கூறும்போது நம் பதவி, நம் கலாச்சாரத்தையும் மனதில் வைத்து மிகவும் கவனமாக பேச வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் நட்சத்திரப் பிரசாரகர் பட்டியலில் நேற்று பிரியங்கா இடம் பெற்றிருந்தார். இதன் மீது கருத்து கூறிய பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய்கட்டியார், பிரியங்கா அழகானவர் அல்ல எனவும் அவரை விட அழகானவர்கள் தம் கட்சியில் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இவருக்கு முன்னதாக மாநிலங்களவையின் மற்றொரு உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர் சரத்யாதவும் பெண்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார்.

இது குறித்து சரத்யாதவ் வாக்காளர் தினம் மீதான கருத்து கூறுகையில், ‘நாம் வாக்களிப்பது என்பது நம் மகளுக்கு அளிக்கும் கவுரவத்தை விட அதிகமானது. மகளின் கவுரவம் குறைவது என்பது நாம் வசிக்கும் பகுதி அல்லது கிராமத்தின் கவுரவம் குறைவது போலாகிவிடும். இந்த வாக்கை விற்கவோ, வாங்கவோ முயன்றால் நம் நாட்டின் முழு மானமும் பறிபோவது போல் ஆகும்.’ எனத் தெரிவித்திருந்தார்.

பிஹாரை ஆளும் அரசியல் கூட்டணிக்கட்சியின் மூத்த தலைவரான சரத்யாதவின் இந்தக் கருத்தும் இன்று சர்ச்சைக்குள்ளாகி இருந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x