

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு, ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி படுகைகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்பது குமார் மங்கலம் பிர்லா மீதான புகார் ஆகும். இதே போல், நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. பதிவு செய்துள்ள 14வது முதல் தகவல் அறிக்கையில் குமார் மங்கலம் பிர்லா, அவரது ஹிண்டால்கோ நிறுவனம், பி.சி.பரேக், ஆகியோர் மீது ஏமாற்றுதல், சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல், போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. சோதனை:
இதற்கிடையே, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக டெல்லி, கோல்கட்டா, புவனேஸ்வர், மும்பை ஆகிய பெரும் நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் பின்னணி:
இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய புலனாய்வு ஆணையமான சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
'சட்ட' சிக்கல்:
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் சட்ட அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் தலையிட்டு திருத்தம் செய்ததாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குனர் பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்தார். விளைவு சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் பதவி இழக்க நேர்ந்தது.
சி.பி.ஐ. வளையத்தில் பெரும் புள்ளிகள்:
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அரசுக்கு பொய்யான தவலை அளித்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டைப் பெற்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.