

கர்நாடக மாநில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம்.கே.கணபதியின் தற்கொலைக்கு காரணமான அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் உடனடியாக பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு மங்களூரு காவல் துணை கண் காணிப்பாளர் எம்.கே.கணபதி (56) திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “ஒரு வழக்கு தொடர்பாக பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் உளவுத் துறை மூத்த அதிகாரி ஏ.எம்.பிரசாத், லோக் ஆயுக்தா ஐஜிபி பிரணாப் மொஹந்தி ஆகியோர் என்னைக் கண்டித்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த மூன்று பேருமே காரணம்” என தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி அளித்த சில மணி நேரத்திலேயே கணபதி தற்கொலை செய்துக்கொண்டார்.
எனவே கணபதியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் போர்க் கொடி தூக்கி உள்ளன. இந்நிலை யில் அமைச்சர் ஜார்ஜை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீதரில் உள்ள அம்பேத்கர் சதுக்கத்தில் திரண்ட பாஜகவினர், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், அமைச்சர் ஜார்ஜுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அப்போது பீதர் மாவட்ட பாஜக தலைவர் ஷிலேந்திரா பேசும்போது, “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் கொலை, தற்கொலை தொடர்கதை யாகிவிட்டது. அரசு அதிகாரி களுக்கே இந்த பரிதாப நிலை என்றால் அப்பாவி மக்களின் நிலையை சொல்ல தேவையில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தராமையாவின் சொந்த மாவட்டத்திலேயே (மைசூரு) ஐஏஎஸ் அதிகாரி ரஷ்மி உள்ளூர் வாசிகளால் தாக்கப்பட்டார். அடுத்து நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி தற்கொலை செய்துகொண்டார்.
அதன் பிறகு அமைச்சர் பரமேஷ்வர் நாயக் மிரட்டியதால், பெண் போலீஸ் டிஎஸ்பி அனுபமா ஷெனாய் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதுதவிர, கடந்த ஒரு வாரத்தில் காவல் துறை அதிகாரிகள் கள்ளப்பா ஹன்டிபேக், கணபதி ஆகிய இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் கணபதி தனது மரணத்துக்கு அமைச்சர் ஜார்ஜும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளும்தான் என பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பிறகும் சித்தராமையா, ஜார்ஜை பதவி நீக்கம் செய்யாமல் மவுனமாக இருக்கிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்யும் வரை பாஜகவினரின் போராட்டம் தொடரும” 'என்றார். இதேபோல பாஜகவினர் பெங்களூரு, குடகு, ஹூப்ளி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.ஜே.ஜார்ஜ்