வறுமையே வன்முறைக்கு முக்கிய காரணம்: இந்திய குழந்தைகள்

வறுமையே வன்முறைக்கு முக்கிய காரணம்: இந்திய குழந்தைகள்
Updated on
1 min read

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் தங்கள் நாடுகளில் நடக்கும் வன்முறைக்கான முக்கிய காரணங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதில் இந்தியாவிலுள்ள 50% குழந்தைகள் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமான வறுமையே என்று குறிப்பிட்டிருக்கிறனர்.

சைல்ட்ஃப்ண்ட் என்ற அமைப்பு சமீபத்தில் 47 நாடுகளில் உள்ள 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 6, 499 குழந்தைகளிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 29% குழந்தைகள் தீய பழக்கங்களையும், 28% குழந்தைகள் போதை, குடி பழக்கங்களையும் உலகில் நடக்கும் வன்முறைக்கான காரணமாக குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் நடக்கும் வன்முறைக்கு கல்வியின்மை, குடும்ப வன்முறை, சமூக மோதல்கள் ஆகியவையும் முக்கிய காரணங்களாக குழந்தைகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, குழந்தைகளிடம் நீங்கள் ஒரு வேளை இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தால், வன்முறையை தடுக்க என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு 41% குழந்தைகள் கடுமையான சட்டங்களை அமல்படுத்துவேன் என்று பதிலளித்துள்ளனர்.

நீங்கள் எங்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 44% குழந்தைகள் பள்ளியையும், 38% குழந்தைகள் வீட்டையும் கூறியுள்ளனர்.

மேலும், அவர்களிடம் உங்களுக்கு எது மிகவும் முக்கியமாக விளங்குகிறது என்று கேட்கப்பட்டது. இதற்கு கல்வியே பிரதானமாக கூறும் குழந்தைகளில், 85 சதவீத பேர் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

23% குழந்தைகள் தங்களுக்கு பிடித்த தலைவர்களாக மகாத்மா காந்தியையும் சுபாஷ் சந்திர போஸையும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு குறித்து, சைல்ட்ஃப்ண்டின் இந்திய இயக்குனர் கேத்ரீன் மாணிக் கூறுகையில், "வன்முறை, அமைதி, மகிழ்ச்சி, வழிகாட்டிகள் ஆகியவற்றைக் குறித்து குழந்தைகளின் கருத்துகளை அறிவதே இந்த ஆண்டு ஆய்வின் நோக்கம். குழந்தைகள் தங்களின் உலகத்தை முன்னேற்றவும் சிந்திக்கிறார்கள் என்று இந்த ஆய்வு காட்டுகிறது." என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in