

மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாக கபில் சிபலும், காங்கிரஸ்தான் ஆவணப் போக்குடன் ஊடகங்களை மதிப்பதில்லை என்று மோடியும் பரஸ்பரம் கடுமையாக சாடினர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல், "பொதுவாக நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்திப்பதே இல்லை. பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசுவார். அப்போதுதான் அவர் கூறும் பொய்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புணேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான மோடி பேசும்போது, "கடந்த 2 மாத காலங்களில் காங்கிரஸ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் பேச்சுக்களை ஆராய்ந்தால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது புரியும். அவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்களோ அதை மேடையில் பேசவே மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஆணவப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்சித் தலைவர்கள் ஊடகங்களை மதிப்பது இல்லை. ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை" என்றார் நரேந்திர மோடி.
முன்னதாக, ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று மோடிக்கு சவால் விடுத்த கபில் சிபல், நரேந்திர மோடியின் ஒவ்வொரு பொதுக்கூட்ட மேடைக்கும் ரூ.10 கோடி முதல் ரூ.10 கோடி வரை செலவிடப்படுகிறது. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது. அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடியின் பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கு கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது என்று குற்றம்சாட்டியது கவனத்துக்குரியது.