

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர் மன்னா டே, வியாழக்கிழமை அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
இந்தி, வங்காளம், மராட்டியம், கன்னடம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் 4000-க்கும் அதிகமான பாடல்களை மன்னா டே பாடியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் பெங்களூரில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேற்கு வங்கத்திலிருந்து மும்பைக்கு..!
இந்திய திரையுலகில் பின்னணிப் பாடகராக கொடிகட்டிப் பறந்த மன்னா டே 1919-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரிய மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே.சிறு வயது முதலே இசை ஆர்வம் மிகுந்த இவர் தனது மாமாவும் பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளருமான கிருஷ்ண சந்திரா டே மூலமாக மும்பைக்கு அழைத்துவரப்பட்டார்.
ஆரம்பத்தில் சிறிய அளவிலான கச்சேரிகளிலும்,நாடகங்களிலும் பாடிய மன்னா டே-விற்கு,1942-ஆம் ஆண்டு முதன் முதலாக 'தமன்னா' என்ற இந்தி திரைப்படத்தின் வாயிலாக பின்னணிப் பாடகராகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பாடலே 'ஹிட்' ஆனது. இதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தனது வெண்கலக் குரல் மூலம் மக்களின் மனங்களை மயக்கும் வகையில் பாடல்கள் பாடியதால் 'மன்னா டே' என அழைக்கப்பட்டார். காதல் ததும்ப இவர் பாடிய இனிய கீதங்கள் என்றென்றும் காலத்தால் அழியாதவை. சுலோசனா குமரன் என்ற கேரளப் பெண், மன்னா டே வை காதலித்து கரம்பிடித்தார்.
புகழின் உச்சியில்!
முகமது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார் போன்றோர் இந்தி சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலத்தில் திரைத்துறையில் நுழைந்த மன்னா டே, தனது விடாமுயற்சியாலும், இடைவிடா பயிற்சியாலும் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.
1953-ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை வெளியான அனைத்து இந்திப் படங்களிலும் மன்னா டே பாடிய பெரும்பாலான பாடல்கள் 'மெகா ஹிட்' பாடல்களாக அமைந்தன. இதனால் அந்த காலத்தில் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக இருந்த ராஜ் கபூர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா ஆகியோர் நடித்த படங்களில் மன்னா டே பல பாடல்களைப் பாடினார்.
இந்தி சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் வங்காளி, போஜ்பூரி, அசாமி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் பாட ஆரம்பித்தார்.
குவிந்த விருதுகள்
சிறந்த பின்னணிப் பாடகருக்கான 'தேசிய விருதை' 2 முறை பெற்றிருக்கிறார் மன்னா டே. 1971-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு 'பத்ம விருது வழங்கி கௌரவித்தது. 2005-ம் ஆண்டு அவருக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. மன்னா டே-வின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக 2012-ஆம் ஆண்டு இந்திய திரைத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருதும் வழங்கப்பட்டது.
கடந்த ஆறு தலைமுறைகளாக தொடர்ந்து திரைத்துறையில் பாடி வந்த மன்னா டே தனது சுயசரிதத்தை 2005-ம் ஆண்டு "உயிருள்ள நினைவுகள்'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
மும்பையிலிருந்து பெங்களூர்
50 ஆண்டுகளுக்கும் மேலாக 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ள மன்னா டே, தனது முதுமைக் காலத்தை அமைதியாக கழிக்க விரும்பினார். இதனால் 2009-ம் ஆண்டு பெங்களூர் புறநகர்ப் பகுதியில் இருக்கும் கல்யாண் நகரில் புதிதாக வீடு கட்டி தனது மனைவியுடன் குடியேறினார். இதனால் மும்பையிலும்,வெளிநாட்டிலும் வசித்து வந்த இரு மகள்களும் பெற்றோருடன் பெங்களூருக்கே வந்து தங்கினர். பெங்களூர் வந்த பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த மன்னா டே கடைசியாக 2006-ஆம் ஆண்டு வெளியான 'உமர்' என்ற படத்தில் மட்டும் பாடினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2012-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற கச்சேரியில் கலந்து கொண்டு பாடினார். அது தான் அவரின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது.
மருத்துவமனையில் அனுமதி
புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த மன்னா டே-வின் மனைவி சுலோசனா குமரன் கடந்த ஆண்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் நலிவுற்று இருந்த மன்னா டே, ஜூன் 8-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.மேலும் அவருக்கு நுரையீரலில் பிரச்சினையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாகவே திடீரென உடல் நிலை நலிவுறுவதும்,பிறகு தேறுவதுமாக இருந்த மன்னா டே, வியாழக்கிழமை அதிகாலை மரணம் அடைந்ததாக நாராயண ஹிருதயாலயா மருத்து வமனை தலைமை மருத்துவர் வாசுகி அறிவித்தார்.
அஞ்சலி
பிரபல பாடகர் மன்னா டே-வின் மரண செய்தி கேட்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது. மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி,கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த மன்னா டே-வின் உடலுக்கு பொது மக்களும் அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங் களும் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாஷேத்ராவில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் கொட்டும் மழையில் வியாழக்கிழமை மாலை பெங்களூரில் தகனம் செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் இரங்கல்
திரைப்படப் பின்னணிப் பாடகர் மன்னா டே ஒரு மேதை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புகழாரம் சூட்டினார். மன்னா டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரின் மகள் சுமிதா தேவுக்கு பிரணாப் முகர்ஜி அனுப்பியுள்ள கடிதத்தில், “நாடு மிகச்சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டது. தனது காந்தக் குரலால் எண்ணற்ற ரசிகர்களை மெய்மறக்கச் செய்தவர் மன்னா டே. தனித்துவமிக்க திறமையை கொண்டிருந்த அவரின் மனதை வருடும் பாடல்கள் காலத்தால் அழியாதவை” என்று தெரிவித்துள்ளார்.
மன்னா டே மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.