

மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடை குறித்து விவாதம் நடத்த வரும் 8-ம் தேதி கேரள சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான முடிவு நேற்று (வியாழக்கிழமை) கேரள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்டது.
கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது.
இது நாடெங்கும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலம் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 8-ல் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவது குறித்தும் பிற மாநில முதல்வர்களை அழைத்து மாட்டிறைச்சித் தடையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்தும் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.