

ஏர்செல் - மேக்சிஸ் பணப் பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முதன் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான கார்த்தி சிதம்பரத்தின் சொந்த நிதி ஆவணங்களை நேரிலோ அல்லது அதிகாரபூர்வ பிரதிநிதி மூலமோ அமலாக்கத் துறையிடத்தில் சமர்ப்பிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம், செஸ் குளோபல் அட்வைசரி சர்விசஸ் ஆகிய நிறுவனங்களில் கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்து வருவது பற்றிய விவகாரம் இது என்பது தெரிய வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஸ் குளோபல் நிறுவனம் மற்றும் அட்வாண்டேஜ் கன்சன்ல்டிங் நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவும், வருமான வரித்துறை அதிகாரிகளும் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகள் குறித்து கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறிய அதேவேளையில் தந்தை ப.சிதம்பரம் தனது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காகவே நடத்தப்பட்ட நடவடிக்கை என்று சாடினார்.
இவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து ஏர்செல் டெலிவென்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.26 லட்சம் தொகை கைமாறியதாக அமலாக்க விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளினால் 2ஜி வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.