

மெட்ரோ ரயிலில் பயணித்து டெல்லி முதல்வராக பதவியேற்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வராக நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில் சென்றே தானும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே டெல்லியில் மக்கள் தர்பார் (பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் முகாம்) நிகழ்ச்சியை அர்விந்த் கேஜ்ரிவால் நடத்தி வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இன்று 3-வது நாளாக அவர் மக்கள் தர்பாரை நடத்தினார். அப்போது அவர் பொது மக்களிடம், இதனை தெரிவித்தார்.
மக்கள் தர்பாருக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அவர் கூறுகையில்: "மக்களின் அமோக ஆதரவு அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளதையும், அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதையும் உணர்த்துகிறது. அதனாலேயே மக்கள் திரண்டு வந்து தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கின்றனர்" என்றார்.