

சமாஜ்வாதி கட்சி எப்போதும் தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளின் பக்கமே இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் உத்தரப்பிரேதச பொதுப்பணித் துறை அமைச்சருமான ஷிவ்பால் சிங் யாதவ் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவ். இவர் உத்தரப்பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சராகவும் உள்ளார். கடந்த திங்கள்கிழமை இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த சர்ச்சைக்குரிய வீடியோ எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த வீடியோவில் பேசும் ஷிவ்பால் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சியானது பிரிவினைவாத அமைப்புகளான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங், பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றை எதிர்த்தும், கண்டித்தும் வந்துள்ளது எனக்கூறுகிறார். ஆனால், ஒரு கட்டத்தில், சமாஜ்வாதி கட்சி தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளின் பக்கம் உள்ளது என அவர் கூறுவது பதிவாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, அம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதியின் உண்மையான சொரூபத்தைக் காட்டுகிறது என பாஜக விமர்சித்துள்ளது. “முன்பொருமுறை முலாயமின் பிறந்தநாள் விழாவுக்கான செலவுகளை தாதா தாவூத் இப்ராஹிம் ஏற்றுக்கொண்டார் என அமைச்சர் முகமது ஆசம்கான் தெரிவித்திருந்தார். தற்போது ஷிவ்பால் இவ்வாறு கூறியுள்ளார். இதுதான் அவர்களிடம் மறைந்திருக்கும் உண்மை” என பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.