இறுதிவரை விளங்காத சந்திராசாமி புதிர்

இறுதிவரை விளங்காத சந்திராசாமி புதிர்
Updated on
1 min read

ரங்கநாத்துக்கு அவரது நண்பர் ராஜனின் மூலமாக விடுதலை புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, போலீஸார் சிவராசன் குழுவினரை நாடு முழு வதும் தேடினர். சிவராசன் தலைக்கு ரூ.10 ல‌ட்சம், சுபா தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி நிர்ணயித்தனர். அதே ஆண்டு ஜூலை 30-ல் சிவராசன், சுபா, ஓட்டுநர் கீர்த்தி, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூருவில் உள்ள ரங்கநாத்தின் வீட்டுக்கு சென்றனர்.

சிவராசன் குழுவினர் சில நாட்கள் த‌னது வீட்டில் தங்க ரங்கநாத் இடம் கொடுத்தார். இதனை மோப்பம் பிடித்த போலீஸார் ரங்கநாத்தின் வீட்டை நெருங்கினர். இரவோடு இரவாக சிவராசன், சுபா உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு கோனனே குன்டேவில் தனியாக இருந்த‌ வீட்டில் ரங்கநாத் குடியேறினார். சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் ஆகஸ்ட் 17-ல் கோனனே குன்டே வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ரங்கநாத் மூலமாக சிவராசனுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார். திடீரென மேலிட உத்தரவின்படி பேச்சு வார்த்தையை கைவிட்டு சிவராச னின் வீட்டை நோக்கி துப்பாக்கி யால் சுட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்தார். இதேபோல சுபா, ஓட்டுநர் கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர் உள்ளிட்ட‌ அனைவரும் ச‌யனைடு குப்பியை விழுங்கி இறந்தனர்.

இது தொடர்பாக ரங்கநாத் திடன் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தியபோது, “எம்.ஜி. சாலையில் உள்ள அஜந்தா, காமதேனு விடுதிகளுக்கு சிவராசன் செல்வார். அங்கிருந்த எஸ்டிடி பூத்தில் இருந்து ஹரித் துவாரில் இருந்த சந்திரா சாமிக்கு போன் பேசுவார். அப்போது

‘கொலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. விரைவில் நேபாளத் துக்கு தப்பி செல்ல வேண்டும். நீங்கள் தான் உதவ வேண்டும்' என சந்திராசாமியுடன் சிவராசன் பேசினார்” என ரங்கநாத் தெரிவித்தார்.

இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சோனியா காந்தி, ரங்கநாத்தை சந்திக்க விரும்பினார். டெல்லி சென்ற ரங்கநாத்திடம் சோனியா காந்தி 7 கேள்விகளை கேட்டார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி உள்ளிட்டோருக்கு இருந்த தொடர்பை ரங்கநாத் விவரித்தார். ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதுகூட ரங்கநாத்தின் புகார் குறித்து விசாரிக்கப்படவில்லை. ரங்கநாத் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்து சயனைடு, மெட்ராஸ் கபே உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி குறித்த புதிர்களும் மர்மங்களும் மறையாத நிலையில் ரங்கநாத்தும் மறைந்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in