

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆஜ்மீர் தர்காவில் 805-வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தர்காவின் தலைவர் சையது ஜைனுல் அபேதின் அலி கான் நேற்று முன்தினம் பேசும்போது, “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். மாட்டிறைச்சி விற்பனைக்கு மட்டுமல்லாமல் பசு, எருது, எருமை என அனைத்து வகையான கால்நடைகளை யும் கொல்வதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். மாட்டிறைச்சி உண்ண மாட்டோம் என முஸ்லிம்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அலி கானின் சகோதரர் சையது அலாவுதீன் அலிமி நேற்று கூறியதாவது:
எனது சகோதரர் அலி கான் இஸ்லாமிய சட்டத்தை மீறும் வகையில் பேசி உள்ளார். இதனால் அவரை தர்கா தலைவர் பதவியிலிருந்து நீக்கி உள்ளேன். தர்காவின் புதிய தலைவராக நான் பொறுப்பேற்கிறேன்.
இந்த பதவிக்காக ஊதியம் பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது சகோதரர் அதை பெற்றுக் கொள்ளட்டும். ஆனால், அவரை தர்காவுக்குள் அனுமதிக்க மாட்டேன். எனது சகோதரருக்கு எதிராக தடை உத்தரவு (பட்வா) பிறப்பிக்கப்படும். அவர் இனி முஸ்லிமாகவே கருதப்படமாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சூபி மத போதகரின் வாரிசுகளுக்கு மரபு வழியாக இந்தப் பதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டு முதல் அலி கான் இப்பதவியில் இருந்து வந்தார்.