தீவிரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள், பெண் பலி

தீவிரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள், பெண் பலி
Updated on
1 min read

காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 3 ராணுவ வீரர்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகரில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவில், ஷோபியான் மாவட்டத்தின் முலு சித்தர்காம் என்ற கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குங்னூ சோபியான் என்ற இடத்தில் தீவிரவாதிகளைத் தேடும் பணியை முடித்துக் கொண்டு ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படையினரும் மாநில போலீஸாரும் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மறைவிடங்களில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ அதிகாரிகள் உட்பட 6 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பின்னர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து ராணுவ வீரர்களும் போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு மோதலில் அருகில் ஒரு வீட்டில் இருந்த ஜனா பேகம் என்ற பெண் உயிரிழந்தார்.

இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஏஜென்சியை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர் தன்னை இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என அறிமுகம் செய்துகொண்டார். சித்தர்காம் கிராமத்தில் ராணுவ வீரர்கள் மீது தங்கள் அமைப்புதான் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in