

அய்யாக்கண்ணு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தவுள்ளதாக, டெல்லி போராட்டக்களத்தில் உள்ள தமிழக விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
டெல்லி - ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 41-வது நாளை எட்டியுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வங்கிக் கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். நாள் தோறும் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார்.
இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் பிரச்சினைத் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை விவசாயிகள், தமிழக முதல்வரிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அய்யாகண்ணு கூறும்போது, "41 நாட்களாக இங்கேயே அமர்ந்து போராடி வருகிறோம். தமிழகம் வறட்சி மாநிலம் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. விவசாயத்தில் அழிந்துவிட்ட பயிர்களுக்கு ரூ.21,000 கோடி கேட்டிருந்தீர்கள். ஆனால், மத்திய அரசு தரவில்லை. அப்பணத்தை மத்திய அரசிடமிருந்து வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும்.
10 ஆண்டுகளாக சரியான மழையில்லை. ஆகையால், விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. ஆனால் வங்கி அதிகாரிகள் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அசிங்கமாக பேசுகிறார்கள். உ.பி.யில் 6000 கோடி ரூபாய் வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளார்கள். அதேபோல தமிழகத்தில் விவசாயிகள் வாங்கியிருக்கும் மொத்த கடனே 6140 கோடி ரூபாய் தான். இதனை தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து தேசிய வங்கியில் வாங்கியிருக்கும் கடனை எல்லாம் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்க வேண்டும். இல்லையென்றால் உ.பி அரசே கடனை தள்ளுபடி செய்தது போல, தமிழக அரசே கடனை தள்ளுபடி செய்தாலும் எங்களுக்கு கவலையில்லை" என்று தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, "அய்யாகண்ணு சில கோரிக்கைகளை இங்கே தெரிவித்துள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருக்கின்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதனை இன்று பிரதமரை சந்திக்கும்பொழுது அதை வலியுறுத்திச் சொல்வேன். 2 பருவமழைகள் பொய்த்துவிட்டன. 140 ஆண்டுக்காலம் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அது சம்பந்தமாக பிரதமரை சந்தித்து ரூ.39,665 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 2247 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகைகள் வங்கிகளின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு புதிதாக பயிரிட்டு இருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடனையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதேபோல, நீர்நிலைகளில் இருக்கும் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி அதற்கு 100 கோடி ரூபாய் முதற்கட்ட ஒதுக்கி ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மேலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்வதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இங்கு அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமரிடம் வலியுறுத்தி கூறுவேன். 41 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடந்தி வருகின்ற தமிழக விவசாய பிரதிநிதிகள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்துக்கு திரும்ப வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவீர்களா என்று அய்யாகண்ணுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "பிரதமரை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர்களை சந்தித்து எங்களையும் அழைத்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது" என்று கூறினார்.