

மணிப்பூரில் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து போட்டி யிட்ட சமூக ஆர்வலரும், இரும்பு பெண்மணியுமான இரோம் சர்மிளா படுதோல்வி அடைந்தார். அவருக்கு மொத்தம் 90 வாக்குகளே கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசியலுக்கு முழுக்குப் போட அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்து வரும் இபோபி சிங்கை எதிர்த்து இரோம் சர்மிளா தவுபால் தொகுதியில் போட்டியிட்டார். இதற்காக மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியை அவர் தொடங்கினார். எனினும் தேர்தலில் அவருக்கு மக்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் தவுபால் தொகுதியில் முதல்வர் இபோபி சிங் 18,649 வாக்குகள் பெற்று எளிதாக வெற்றி பெற்றார். பாஜகவின் வசந்தா சிங் 8,179 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றார். திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் லெய்சங்தெம் சுரேஷ் சிங் 144 வாக்குகள் பெற்றதால், முதல் முறையாக தேர்தலை சந்தித்த இரோம் சர்மிளா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். படுதோல்வியால் விரக்தி அடைந்துள்ள இரோம் சர்மிளா அரசியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.